காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வீதி புனரமைப்பு – மக்கள் விசனம்

காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வீதி புனரமைப்பு - மக்கள் விசனம்

மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதி புனரமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் கடற்கரை வீதிக்கு வருகைத் தந்த மக்கள் வீதிப்புனரமைப்பில் ஈடுபட்டிருந்தவர்களை வேலையை நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

சம்பவத்தைக் கேள்வியுற்ற அருட்தந்தையர்களும் அவ்விடத்திற்கு வருகை தந்ததோடு மன்னார் பிரதேச செயலாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலையை இடை நிறுத்தி திரும்பிச் சென்றனர்.

இது குறித்து கிராம மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இவ்வீதியைப் புனரமைப்பதற்காக, கடற்கரையை அண்டிய பகுதியில், மணல் அகழப்பட்டு வருகிறது அத்துடன் ஆயிரக்கணக்கான பயன் தரும் மரங்கள், இந்தத் திட்டத்திற்காக அடியோடு பிடுங்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலத்தில் மன்னாரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பல நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி இருந்தன. இவ்வாறான நிலையில் இந்த கடற்கரை ஓரங்களில் மண் அகழ்வது மற்றும் மரங்கள் பிடுங்கப்படுவது மண்ணரிப்பை ஏற்படுத்தும் கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயமும் ஏற்படும்” என தெரிவித்தனர்.

எனவே இத்திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version