அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை பாடவேண்டாம்-மனோ

அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை பாடவேண்டாம்-மனோ

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடமல் அரசியில் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மனோகணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழுள்ள விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

இது எங்களுக்கு பழகி போன ஒரு பழைய பல்லவி. இன்று புது புரட்சி மாற்றம் செய்ய போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த புரட்சி அரசாங்கமும் அதே அரைத்த மாவையே அரைக்கிறது. இப்படியான பல பல்லவிகளை கேட்டு, முரண்பட்டு, ஜனநாயக ரீதியாக போராடிய வரலாற்றை கொண்ட எமக்கு, இது பழகி போன ஒரு மேலாதிக்க அரசியல் கருத்து.

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள். “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் சகல சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version