காங்கேசன்துறையை அண்மித்த பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் அவர்களை கைது செய்ய முயற்சித்த வேளையில் தவறுதலாக கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதனாலேயே மீனவர்கள் மீது குண்டு பாய்ந்தது எனவும் அந்த சம்பவம் ஒரு விபத்து எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட தெரிவித்துள்ளார்.
“குறித்த சம்பவம் நடைபெற்ற வேளையில் இந்திய மீனவர்கள் கடுமையாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்டனர் எனவும் கடற்படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக மீனவர்களின் படகில் கடற்படையினர் ஏற முற்பட்ட போது அவர்களை குழுவாக இணைந்து தாக்க முயற்சித்த அதேவேளை, துப்பாக்கியை பறிக்க முற்பட்டனர். அந்த இழுபறியிலேயே துப்பாக்கி வெடித்தது” என மேலும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
நேற்று(28.01) அதிகாலை நெடுந்தீவுக்கு அண்மையாக இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுப்பட்ட வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றது. 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரும் கடற்படையினரின் முதலுதவிக்கு பின்னர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து மீனவர்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதரத்தை இல்லாமல் செய்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு இந்தியாவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து தமது கணடனத்தை வெளியிட்டிருந்தது. இன்று தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.