
இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும்
தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு நேற்று (15) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்ட பிரதமர், பாடசாலையின் இந்து கலாசார வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
இதன் போது பாடசாலையின் சாதனைகள் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகள் குறித்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
“யாழ்ப்பாண இந்துக் கல்லூரி நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பிரதான பாடசாலைகளில் ஒன்றாகும்.
இந்த பாடசாலை அடைந்துள்ள சாதனைகள் பற்றி நீங்கள் வழங்கிய அறிக்கை மிகவும் சிறப்பானது. பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற விதம் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகும்.
அரசு என்ற வகையில் நாம் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதிபர் கூறியது போல் பகுதிநேர வகுப்புகள் இன்று வளர்ந்துள்ளன. நமது கல்வி முறையின் தோல்வியின் காரணமாகவே இந்த டியூஷன் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. டியூஷன் வகுப்புகள் குறைக்கப்பட வேண்டுமானால், எமது குழந்தைகளுக்கு பாடசாலை மூலம் சிறந்த கல்வியை வழங்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கல்லூரிக்கு மட்டுமன்றி இலங்கையிலுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் மிக உயர்தரமான கல்வியை வழங்க விரும்புகிறோம்.
கல்வி சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பில் நீங்கள் உட்பட வடமாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.
சிறந்த கல்வியின் மூலம் சமூகத்திற்கு நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த தலைமையை உருவாக்குவது எமது பொறுப்பாகும்” என்றார்.