
ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் இன்று(17.02) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கே நிதியமைச்சராக இந்த வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்பின்னர் 25ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை நாட்டு மக்கள் உட்பட வெளிநாடுகளும் எதிர்பாத்து காத்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த வரவு செலவு திட்டம் முக்கியம் பெறுகின்றது.