
இலங்கை கிரிக்கெட் வீரரும் முன்னாள் தலைவருமான தஸூன் ஷாணக்கவிற்கு பத்தாயிரம் டொலர் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா பெறுமதிப்படி இது கிட்டத்தட்ட முப்பது இலட்ச ரூபாய். இந்த தண்டத்தினை இம்மாதம் 28 ஆம் திகதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் கட்டளை இட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் மேஜர் லீக் தொடரில் SSC அணிக்காக விளையாடி வரும் தஸூன் ஷாணக்க கடந்த மாதம் 31 ஆம் திகதி மூர்ஸ் அணியுடனான 3 நாள் போட்டியில் முதல் 2 நாட்களையும் விளையாடிவிட்டு பொய் உபாதையை கூறி களத்திலுருந்து வெளியேறிய தஸூன் ஷாணக்க 2 ஆம் திகதி துபாயிற்கு சென்று சர்வதேச லீக்(ILT20) தொடரின் இறுதிப் போட்டி பயிற்சியில் ஈடுபட்டு இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்.
உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஓய்வு பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை மீறி டுபாயில் போட்டிகளில் கலந்து கொண்டது ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒப்பந்தங்களை மீறும் செயல் எனவும் அதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.