பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது அழிந்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2025 வரவு செலவு திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று வியாழக்கிழமை (12.03) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இது நமது நாட்டிற்கு டொலர்களை ஈட்ட சிறந்த வழியாகும். இது தொடர்பிலான பல யோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு முன்வைக்கிறேன். இது தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தும் என நம்புகிறேன்.
நாட்டுக்கென தேசிய விவசாயக் கொள்கையை வகுக்க வேண்டும். காலத்துக்குக் காலம் மாறும் கொள்கைகளுக்குப் பதிலாக தேசியக் கொள்கையை வகுத்து, விவசாய சமூகத்துக்கும் விவசாயத்துக்கும் பெறுமானமளிக்க வேண்டும். விவசாயம் தோல்வி கண்டு விட்டது. அது நஷ்டம் ஏற்படும் துறை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். நவ லிபரல் சிந்தனைகள் மோலோங்க அனுமதிக்காமல் விவசாயத்தை வலுப்படுத்த தேசிய கொள்கையொன்று எமக்கு தேவையாக காணப்படுகின்றது. இதன் மூலம் விவசாயத்திற்கும், விவசாயிக்கும் உரிய பெறுமானமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயத்தில் புத்தாக்கத்தைப் புகுத்த வேண்டும். விவசாயத்தில் இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித-யானை மோதலை குறைக்க தேசிய நில பயன்பாட்டுத் திட்டம் அவசியமாகும்.விவசாய ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும்.
ஆராய்ச்சித் துறையில் புதிய முன்னேற்றம் ஏற்பட வேண்டும். விவசாயத்தில் இலங்கை ட்ரோன் முறையைப் பயன்படுத்த முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல், புதிய உபகரணங்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கரின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் கணக்கீட்டை நடத்த வேண்டும். அண்மைய அனர்த்தங்களினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை. பயிர்ச் சேதம் ஒரு செலவாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் விலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால், அதனைச் சரியாக நடத்த வேண்டும். நெல் கொள்வனவுக்கு ஒதுக்கப்படும் பணம் போதுமானதாக இல்லை. கணிப்பிடப்பட்டுள்ள ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு யதார்த்த பூர்வமானதாக அமைவதாக இல்லை.
எமது நாட்டில் பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் காணப்படுகின்றன. எனவே இதில் கவனம் செலுத்தி புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பழமை வாய்ந்த நீர்பாசனத் திட்டங்களையும் புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.