ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – வெளியேறிய சிறீதரன்

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியதாக
கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன்
ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசியதால் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறினார்.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன்

“இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன்.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன.

தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் தெரிவித்துள்ளார்.

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்” என்றார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், உள்ளிட்டவர்களுடன் திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version