ஜேர்மனியின் ஹம்பேர்க் நகருக்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தொழிற் கல்வி மற்றும் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அவர் 102 ஆவது கிழக்கு ஆசிய நட்புறவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டைன்மியரையும் சந்தித்தார்.
மேலும், முதலீடு, கல்வி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் பிரதமர் பங்கேற்றார்.
ஜேர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சங்கத்தின் (OAV) வருடாந்த கூட்டத்தில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பிரதமர், வர்த்தக தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றியதுடன், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார்.
அபிவிருத்தியடைந்து வரும் முதலீட்டு பிராந்தியமாக இலங்கையின் சாத்திய வளங்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் இயங்கி வரும் 160 இற்கும் மேற்பட்ட ஜேர்மன் நிறுவனங்களின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், வர்த்தகம் மற்றும் வர்த்தகத் துறையில் மேலும் ஒத்துழைப்பைப் பேணுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில், ‘தொழிற் கல்வி மற்றும் பயிற்சிக்கான ஜெர்மன்-ஆசிய மன்றத்தில்’ பிரதமர் சிறப்புரை ஆற்றினார்.
இலங்கையில் தொழிற்கல்வித் துறையில் ஜேர்மனியின் பல தசாப்தகால ஆதரவைப் பாராட்டிய அவர், தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சியை நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், ITECH தொழிற்கல்வி பாடசாலை மற்றும் NXP மற்றும் DESY போன்ற ஜெர்மன் ஆராய்ச்சி நிலையங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கைத்தொழில்களில் புதிய வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.
ஜேர்மன் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியருடன் அவர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்ற பிரதமர், ஜேர்மன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பொருளாதார விரிவாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த விசேட சந்திப்புகளில் பிரதமருடன் ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முத்துக்குமாரன மற்றும் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.