இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05.04) முற்பகல் நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டதாக
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version