கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக எதிர்வரும் மே 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவினால் தபால்மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்தது.
தற்போது குறித்த வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்து அரச அச்சகத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 22, 23, 24 ஆகிய தினங்களில் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும்.