VAT வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெட் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் அமுலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான வெட் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி திருத்தத்திற்கு அமைவாக, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு வெட் வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாட்டு நபர்கள் இலங்கை தனிநபர்களுக்கு மின்னணு தளங்கள் மூலம் வழங்கும் சேவைகளுக்கு வெட் வரி பொருந்தும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி (வெட் வரி) திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version