அமைதியுடன் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் – பிரதமர்

அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் என
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் மனிக் பாம் சனசமூக அபிவிருத்தி நிலையம் மற்றும் உக்குளங்குளம் விளையாட்டு மைதானத்தில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.04) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொதுமக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது. எமது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 வீதத்திற்கும் குறைவான பெண்களே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர். ஆனால் இந்த நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்.

இந்த நாட்டில் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும், குடும்ப அலகைப் பராமரிப்பதிலும், சமூகத்தைப் பராமரிப்பதிலும் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் எம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே அடுத்த தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து சகோதர உறுப்பினர்களை மட்டுமல்ல, சகோதரிகளான உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

வவுனியா தற்போது அபிவிருத்தியடைந்து வரும் நகரமாக உள்ளது. உள்ளூராட்சி மன்றத்தினால் நடக்க வேண்டிய விடயங்கள் நடைபெற வேண்டும். கிராமத்தின் வளர்ச்சியில் உள்ளூராட்சி மன்றம் செயற்றிரனுடன் தலையிட வேண்டும்.

வடபகுதி மக்களுக்கு கல்வி மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். பொதுவாக, நாட்டில் கல்வி வீணடிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக வடக்குப் பகுதி கல்வித் துறைக்கு போதுமான கவனம் செலுத்தப்படாததால், ஏனைய பகுதிகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இதனிடையே மற்றுமொரு பயங்கரமான விடயம் பற்றி அறிந்தேன். இளைஞர் யுவதிகள் கல்வியின் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து வருகிறது. போதைப்பொருள் மற்றும் மது இப்போது எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கிறது. இவற்றில் இருந்து விலகி இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இங்கே வேறு வழிகள் இல்லை.

விஞ்ஞானம், கலை, நாடகம் போன்ற துறைகளில் வளர்ச்சி இன்மையால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியை இழந்துவிட்டனர். எனவே இதற்கு ஒரு பெரிய தலையீடு தேவை என்பதை உணர்ந்தேன்.

ஊழல் இல்லாத ஒரு குழுவை நீங்கள் தெரிவுசெய்தால், நாங்கள் உங்களுக்காக ஒதுக்கும் பணத்தை பயமின்றி ஒப்படைக்க முடியும். உங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு இதைப் பயன்படுத்த முடியும். “அதனால்தான் உங்கள் தெரிவு எங்களுக்கு முக்கியமானது” என பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்புகளில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். திலகநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் ஆகியோர் உட்பட பல உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version