இலங்கை கிரிக்கெட், கொழும்பு ஆர்.பிரேமதசாச மைதானத்தில், தேசிய உயர் செயற்திறன் மையத்திற்கான அதிநவீன நீச்சல் தடாக வசதியை இன்று(22.04) திறந்து வைத்துள்ளது. எட்டு நீச்சல் பாதைகளை கொண்ட அதிநவீன நீச்சல் குளத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விளையாட்டு பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா இல்லெபெருமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உப தலைவர்கள் டாக்டர் ஜெயந்த தர்மதாச மற்றும் ரவின் விக்ரமரத்ன, செயலாளர் பந்துல திசாநாயக்க, பொருளாளர் சுஜீவ கோடலியத்த உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்க ஆகியோருடன் மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தபத்து மற்றும் தேசிய அணியின் வீரர்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்த அதிநவீன நீச்சல் குளம், 25 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் கொண்டது, 1.2 முதல் 1.8 மீட்டர் ஆழம் கொண்டது.
இலங்கை தேசிய அணிகள், ‘A’ அணி மற்றும் தேசிய வேகப்பந்து வீச்சு அணிகளுக்காக விளையாடும் வீர வீராங்கனைகள் அவர்களின்உடற்தகுதி மேம்பாடு, போட்டிக்குப் பிந்தைய மீட்பு மற்றும் காயநிவாரணம் மறுவாழ்வு ஆகியவற்றுக்காக இந்த நீச்சல் தடாகம் பாவிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்காக வருகை தரும் சர்வதேச அணிகளுக்கும் இந்த வசதி கிடைக்கும்.
