ஈஸ்டர் தாக்குதல் – வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு ஐ.நா வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.

அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version