கரையொதுங்கும் ரசாயனப் பொருட்களைக் கையாள வேண்டாம் என எச்சரிக்கை!

மன்னாரில் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை

இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது கடற்கரையோர பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை சேகரிக்காது விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (13.06),வெள்ளிக்கிழமை மாலை,மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற கப்பல் கடந்த மாதம் 25 ஆம் திகதி அன்று விபத்துக்குள்ளானது.

குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்,மற்றும் கொள்கலன்கள் இந்து சமுத்திரத்தில் தற்போது வீசுகின்ற தென்மேல் பருவப்பெயர்ச்சி காற்றின் காரணமாக நேற்றையதினம் (12.06) தொடக்கம் மன்னாரில் சௌத்பார்,கீரி, தாழ்வுபாடு, நடுக்குடா,பழைய பாலம்,வங்காலை போன்ற கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் கூடுதலாக சுற்றுச்சூழல் ரீதியிலே தாக்கத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்ற நிலையில்,கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின்  ஏற்பாட்டில்,முப்படையினரின் உதவியுடன்,கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துவல்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடலில் மிதந்து வருகின்ற பிளாஸ்டிக் கொள்கலன்,மற்றும் பிளாஸ்டிக் துகள்களை மக்கள் சேகரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

குறித்த பொருட்கள் சூழல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிதந்து வருகின்ற பொருட்களைக் கையாள வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

குறித்த பொருட்களை அவதானித்தால் அதனை மாவட்டச் செயலக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளிடமும் தெரியப் படுத்துவதன் மூலம், மிதந்து வருகின்ற பொருட்களை பாதுகாப்பான முறையில்சேகரித்துக் கொள்ள முடியும் எனவும் மக்கள் இவ்விடயம் தொடர்பாக விழிப்புடன் செயற்படுமாறும் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர். அவர் மேலும் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன் மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version