வெளிநாட்டு அமைச்சின் டிஜிட்டல் செயல்முறை விரைவுபடுத்தல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயற்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (17.06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த அமைச்சின் உள்ளக சேவைகள் மற்றும் இராஜதந்திர சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுத் தூதுக்குழு சேவைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகித்தல், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் தூதரக சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான முறையான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளிகளுக்கு தகவல் மற்றும் சேவைகளுக்கான சிறந்த பிரவேசத்தை உறுதிசெய்து, பயனாளிகள் – நட்பு இணைய இடைவழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வலியுறுத்தப்பட்டன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகளை இலகுபடுத்தும் செயற்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில்,டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் பியசேன, தூதரக விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம்

நிர்மல பரணவிதான, மக்கள் இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் மேலதிக பொது முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) பீ.ஜீ.ஜீ.எஸ். யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version