திருகோணமலையில், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது குறித்த நபர் வீட்டின் கூரைமேல் ஏறி தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவமொன்று நேற்றிரவு (16/12) பதிவாகியுள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபரொருவருக்கு நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை கைது செய்ய முற்பட்ட போது, குறித்த நபர் வீட்டின் கூரை மேல் ஏறி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில் கூரையில் இருந்து வழுக்கி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறொரு பெண்ணை திருமணம் செய்ததன் காரணத்தினால், முதல் மனைவியால் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இரு பிள்ளைகளுக்கும் பணம் செலுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் பிள்ளைகளுக்கான கட்டணத்தையும் செலுத்தாமல், வழக்கு தவணைகளுக்கும் செல்லாமல் இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த நபரை கைது செய்ய மொரவௌ பொலிஸார் சென்ற போதே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்று பலத்த காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(திருகோணமலை நிருபர்)