ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினரான பெனடிற் யக்கோப் பிள்ளை மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
பெனடிற் யக்கோப் பிள்ளை, அவரது நேரடித் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமைத்துவத்திற்கும், கட்சியின் தலைமைத்துவத்தின் முடிவுக்கும் ஏற்ப செயற்படாமல், தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்து விசாரணை செய்யவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் யக்கோப் பிள்ளை செயற்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டினை விசாரிக்கும் பொருட்டு கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கட்சி ஒழுக்காற்று விசாரணைக்குழு அழைக்கும் தினத்தில் தவறாது சமூகமளித்து ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நானாட்டான் பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் ஆளும் தரப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்பதே கட்சியினது நிலைப்பாடு என்றும் ஆகவே கட்சியின் முடிவுக்கு ஏற்ப செயற்படுமாறும் அவரை கேட்டு கொள்வதாகவும், தங்கள் நேரடித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமைத்துவத்திற்கும் ஆலோசனைக்கும் ஏற்ப செயற்படுமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.