இலங்கை இசையமைப்பாளரின் இந்திய திரைப்படம் ‘181’

உலக சினிமாவின் மேலுமொரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள 181 என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (24/12) மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.

இயக்குநரும் கின்னஸ் சாதனையாளருமான இசாக்கின் திரைக்கதையில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்கும் நோக்கில் ஓர் உண்மைச் சம்பத்தை தழுவி எழுதப்பட்டதாகும்.

உலக சினிமாவில் 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி புதிய திரைப்படம் என்ற சாதனையுடன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பொஸ் புகழ் ஆரி அர்ஜூன் வெளியிட்டிருந்தார்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களாக ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய் சந்துரு ஆகியோர் நடிக்க, இலங்கையின் இளம் இசையமைப்பாளர் புகழ்பெற்ற ஷமில்.ஜே இசையமைத்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

இலங்கையில் வளர்ந்து வந்த ஷமிலின் முதல் இந்திய திரைப்படமாக 181 திரைப்படம் அமைந்துள்ளதுடன், இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள ஷமிலின் இரசிகர்களிடையே திரைப்படம் வெளியாவது குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதில் சகல துறைகளிலும் ஒரு சிறந்த நாடு என்ற வகையில், இலங்கை மண்ணின் இளம் இசையமைப்பாளரும் இலங்கையின் தேசிய விருது பெற்றவருமான ஷமில்.ஜே க்கும் மிகச் சிறந்த ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கின்னஸ் இயக்குநர் இசாக்கும், இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஷமிலும் இணைந்து பணியாற்றியுள்ள இத்திரைப்படம் மேலுமொரு சாதனையை எட்டும் என்பது இரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.

இலங்கை இசையமைப்பாளரின் இந்திய திரைப்படம் '181'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version