ஆப்கான் பெண்களுக்காக குரல் கொடுங்கள் – மலாலா

உலகிலேயே சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவரான பாகிஸ்தானைச்சேர்ந்த மலாலா கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்ததுடன் ஐக்கி நாடுகள் சபையின் இளைஞர்களுக்கான தூதுவராக செயற்பட்டு வருகிறார்.

கடந்த 2012ம் ஆண்டு தனது 15 வயதிலே பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து பெண்களுக்கான கல்வியை பெற்றுக்கொள்ள போராடியததற்காக தலிபான் தீவிரவாதிகளால் மலாலா தனது பள்ளி வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிகிச்சைகளின் பின்னர் உயிர்தப்பியிருந்தார்.

தனக்கு நேர்ந்த விபத்தின் பின்னரும் துணிச்சலுடன் தனது எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது பிறந்தநாளான ஜூலை 12ம் திகதி ஐக்கிநாடுகள் சபையிடம் உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கமைய ஐக்கி நாடுகள் சபை குறித்த தினத்தை மலாலா தினம் எனக் குறிப்பிட்டது.

ஆப்கான் பெண்களுக்காக குரல் கொடுங்கள் -  மலாலா
ஆப்கான் பெண்களுக்காக குரல் கொடுங்கள் -  மலாலா

இதற்கமைய கடந்த ஒன்பதாம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள்சபை பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்குபற்றியிருந்த மலாலா யூசுப்சாய் ஆப்கான் பெண்களுக்காக உலக நாடுகளைக் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் தனது உரையில் “எனது பதினைந்தாவது வயதில் நான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்து வந்தேன். அந்தக் காலகட்டத்தில் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதியிருக்கவில்லை. வணிக நிறுவனங்கள் தமது நிறுவனத்திற்கு பெண்களுக்கு வர அனுமதியில்லை என அறிவித்தல்கள் வைத்திருந்தன.

ஆனால், அந்தக்காலப்பகுதியில் நான் எனது பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்துவந்தேன். ஒருநாள் என்னை ஒரு துப்பாக்கி ஏந்திய தலிபான் தடுத்து நிறுத்தினார். பள்ளி வாகனத்திலிருந்து என்னைக் கீழே இறக்கி என்னை நோக்கிச் சுட்டார். எனது குடும்பமே அச்சத்தில் உறைந்து போனது.

இன்று உலகமே ஒன்று சேர்ந்து குரல் எழுப்பாவிட்டால் விரைவில் ஆப்கானிஸ்தானிலுள்ள உள்ள ஒவ்வொரு பெண்ணும் என்னைப் போன்று இதே கதையைக் கூறவேண்டி நேரிடும். ஆப்கான் பெண்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யக்கூடிய உரிமையைக் கேட்கின்றனர். ஆனால், காபூலில் அவர்களின் போரட்டம் கண்ணீர் புகைக்குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் ஒடுக்கப்படுகிறது.

2012ம் ஆண்டிற்குப் பின்னர் ஆப்கனில் உள்ள பெண் கல்வியாளர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் விளைவாக கடந்த ஆண்டு ஆப்கனில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளில் 39வீதம் பெண்கள். ஆனால் இப்போது அந்த முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. அந்தப் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் சில இடங்களில் பெண்களுக்கான உயர் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வேலைக்கு வர வேண்டாம் என்றும் மாணவிகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்றும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். உலக நாடுகளே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்காக ஒண்றிணைந்து குரல் கொடுங்கள்.” எனக் கோரியிருந்தார்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version