தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்வதை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதே அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டில் அமைச்சர்களை பதவி நீக்குவதை அரசாங்கத்தால் தவிர்க்க முடியாது போகும் என தான் நினைப்பதாகவும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்டால், அரசாங்கத்தினுள் ஏற்படவுள்ள பிளவை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட விவசாயிகளுக்கு துன்பங்கள் இழைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதுள்ள அரசாங்கம் விவசாயிகளை மிரட்டி கழுத்தை நெறித்து எழும்ப முடியாதளவிற்கு துன்பப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
நாட்டிலுள்ள வீடுகளில் எரிவாயு வெடிக்கும் போது, இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை பதவி விலகுமாறு அறிவிக்கப்படவுமில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டினார்.