தமிழ்நாட்டில் நீட் தேர்வுப் பரீட்சைகாரணமாக பல மருத்துவ கற்கைநெறிக்காக கனவுகாணும் மாணவர்கள் தேர்வில் சித்திபெறமுடியாததால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து மருத்துவக் கற்கைநெறி மாணவர்களை விலக்களிக்கும் நோக்கில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் கற்கை நெறி மாணவர்களுக்கான நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியிலும் தேர்தல் பிரச்சாரங்களின் போதும் திமுக கட்சி வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் தலைமையில் நீட் பரீட்சையினால் எழும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்தக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் நீட் பரீட்சையில் இருந்து விடுவிக்கும் பொருட்டு புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சபையில் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மசோதா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து அதிமுக கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.