பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிரபல நேர்முக வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கான போட்டியில் அவர் மாத்திரமே விண்ணப்பித்திருந்த நிலையில் ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கனவே தலைவராக இருந்த எஷான் மணி குறித்த பதவியில் தொடராத காரணத்தினால், பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் போசகரும், முன்னாள் தலைவருமான இம்ரான் கான் ரமீஸ் ராஜாவின் பெயரை பரிந்துரை செய்திருந்தார். போட்டியில்லதாக காரணத்தினால் வாக்களிப்புக்கு தகுதியான ஆறு வாக்குகளும் ரமீஷ் ராஜாவுக்கு கிடைத்தன.
இதன் படி இன்னமும் 3 வருடங்களுக்கு ரமீஸ் ராஜா தலைவர் பதவியில் தொடரவுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நான்காவது கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் 2003 தொடக்கம் 2004 வரை பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியவர் ரமீஸ் ராஜா. நேர் முக வர்ணனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டமையினால் அந்த பதவியிலிருந்து விலகிய அவர் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் பதவிகள் எதனையும் பெறவில்லை.
உலக 20-20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அணியின் பயிற்றுவிப்பாளர் மிஷ்பா உல் ஹக், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் வொக்கார் யூனுஸ் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதே ரமீஸ் ராஜாவின் முதலாவது பணியாகும்.
1984 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக ரமீஸ் ராஜா விளையாடியுள்ளார்.