முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மைத்திரிபால சிறிசேனவை பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் குற்றச்சாட்டுகள் தவறு என்றால் அவற்றை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.
அது தொடர்பில் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 2015ஆம் ஆண்டில், சிலருக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை நிறுத்திவிட்டு, தமங்கடுவையில் உள்ள மதுபானசாலை ஒன்றிற்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
அவரது காலத்தில் உருக்கு தொழிலில் ஈடுபட்டிருந்த இரு நிறுவனங்களுக்கு 2.6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான வரி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ஒப்பந்தங்கள் எதுவும் செய்துகொள்ளாமல் 3 பில்லியன் ரூபா பெறுமதியான சூரியக் கல மின் திட்டங்கள் செய்துக் கொள்ளப்பட்டன.
இவற்றையெல்லாம் விட, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி அவருக்கு முன்பே தெரிந்திருந்தது.
மைத்திரிபால சிறிசேன பற்றிய விவரங்கள் அடங்கிய நான்கு கோப்புகள் என்னிடம் உள்ளன.
மற்றவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வந்து தான் நிரபராதி என்பதை நிரூபிக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன்” என அவர் கூறினார்.
