உலக கிண்ண தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. 32 அணிகள் 8 குழுக்களில் மோதிய நிலையில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.
இன்று நடைபெற்ற போட்டிகளில் குழு G அணிகளான பிரேசில் மற்றும் சுவிற்சலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.
பிரேசில் மற்றும் கமரூன் அணிகளுக்கிடையிலான போட்டியில் பிரேசில் அணியினை கமரூன் அணி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளும் இறுதிவரை கோல்களுக்காக போராடிய நிலையில், வின்சென்ட் அபூபக்கர் கோலினை அடித்து அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் இரண்டு மஞ்சள் நிற அட்டை காட்டப்பட்ட நிலையில் சிவப்பு நிற அட்டை காட்டப்பட்டு வெளியேற்றபப்ட்டார்.
சுவிற்சலாந்து, சேர்பியா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற நிலையில் இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடித்து இறுதியில் 3-2 என சுவிற்சலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியது.
சுவிற்சலாந்து அணி சார்பாக சேர்டன் ஷகிரி 20 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக முன்னிலை பெற்றது. அந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 6 நிமிடங்களில் அலெக்சான்டர் மிற்றோவிச் சேர்பியா அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். டுஷன் லகோவிச் 35 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து முன்னிலையினை ஏற்படுத்தினார். 44 ஆவது நிமிடத்தில் ப்ரீல் எம்போலோ சுவிற்சலாந்து அணிக்காக இரண்டாவது கோலை அடித்து 2-2 என முதற் பாதையினை நிறைவு செய்தனர். போட்டி மீண்டும் ஆரம்பித்து 3 நிமிடங்களில் சுவிற்சலாந்து அணி சார்பாக மூன்றாவது கோலை ரெமோ பிரெயுலர் பெற்றுக் கொடுக்க சுவிற்சலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. போட்டி 3-2 என நிறைவடைய சுவிற்சலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் இடையிடுவே வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மத்தியஸ்தர் சமரசம் செய்து போட்டியினை நடாத்திய போதும், போட்டி நிறைவடைய 2 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் ஏற்பட்ட மோதல் சிறிது நேரம் நீடித்தது.
முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் குழு A இலிருந்து நெதர்லாந்து, செனகல், குழு B இலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, குழு C இலிருந்து ஆர்ஜன்டீனா, போலாந்து, குழு D இலிருந்து பிரான்ஸ், அவுஸ்திரேலியா, குழு E இலிருந்து ஜப்பான், ஸ்பெய்ன், குழு F இலிருந்து மொரோக்கோ, குரேஷியா, குழு G இலிருந்து பிரேசில், சுவிற்சலாந்து, குழு H இலிருந்து போர்த்துக்கல், தென் கொரியா ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | பிரேசில் | 03 | 02 | 01 | 00 | 06 | 02 | 03 | 01 |
| 2 | சுவிற்சலாந்து | 03 | 02 | 01 | 00 | 06 | 01 | 04 | 03 |
| 3 | கமரூன் | 03 | 01 | 01 | 01 | 04 | 00 | 04 | 04 |
| 4 | சேர்பியா | 03 | 00 | 01 | 02 | 02 | -03 | 05 | 08 |
முன்னோடி காலிறுதி போட்டிகள்.
