தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் இணைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 01ம் திகதி முதல் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 03ம் திகதி புயலாகவும் மாறும் தன்மை காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தென் மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.