டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்குபற்றிய முதலாவது போட்டியிலேயே அபார வெற்றியீட்டியது. கயானாவில் இன்று(04.06) நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உகாண்டா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 76 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். உகண்டா அணி சார்பில் பந்து வீச்சில் காஸ்மாஸ் கியூட்டா, மசாபா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
184 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. உகாண்டா அணி சார்பில் எந்தவொரு வீரர்களும் 15ற்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ஃபசல்ஹக் பாரூக்கி 5 விக்கெட்டுக்களையும், நவீன் உல் ஹக், ரஹித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் பாரூக்கி தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, டி20 உலகக் கிண்ணத் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று(04.06) நடைபெறவுள்ளன. பார்படாஸில் நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இன்று நடைபெறவுள்ள மற்றுமொரு போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குறித்த போட்டி டாலஸில் இரவு 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.