ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் 23 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல்களை சீர் செய்யும் முகமாக அனைத்து கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றினை ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாடு வெறும் ஊடக நாடகமெனவும், இதன் மூலம் எந்த தீர்வும் கிடைக்காது என்பதனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பயனில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். அவர்களிடமிருந்து நல்ல தீர்வுகள் வராதென்ற காரணத்தினால் தாம் இந்த மாநாட்டினை புறக்கணிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் எதிர்க்கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த மாநாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஆகிய கட்சிகள் இந்த மாநாட்டுக்கு செல்வதில்லையென அறிவித்துள்ளன.
தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளவுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
