புதிய ஆளுநர், செயலாளர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த நியமனக் கடிதங்கள் நேற்று , (07.04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் வழங்கப்பட்டுள்ளன.

நிதித் துறையில் அனுபவமிக்க கலாநிதி வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பணிப்பாளர், துணை ஆளுநர் மற்றும் சிரேஷ்ட பிரதி ஆளுநர் பதவிகளை வகித்துள்ளார்.

நந்தலால் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுமானி பட்டப் பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் மலேசியாவின் சியசன் மத்திய நிலையத்தின் வருகைதரு ஆராய்ச்சி பொருளியலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் க்ரோஃபர்ட் இல் பொதுக்கொள்கை, பிரயோகப் பேரினப் பொருளியல் (Macroeconomics) பகுப்பாய்வு மையத்தின் ஆலோசகர் குழு உறுப்பினராகவும் உள்ளார் என மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

புதிய ஆளுநர், செயலாளர் நியமனம்

நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.எம். சிறிவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார். நிதி அமைச்சின் அரச நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமை புரிந்துள்ளார்.

சிறிவர்தன, பேரினப் பொருளாதார (Macroeconomics) முகாமைத்துவம், பேரினப் பொருளாதார முன்கணிப்பு, நிதிக் கொள்கை, மத்திய வங்கியியல், அரச நிதி மேலாண்மை, அரச கடன் முகாமைத்துவம், நிதி செயற்பாட்டியல் போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக சர்வதேசப் பயிற்சியைப் பெற்றுள்ளார் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ள்து.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version