பெப்ரவரி வரை உணவு தட்டுப்பாடு – பிரதமர்

சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுவார்த்தைகள் ஜூன் நடுப்பகுதிக்குள் நிறைவடைந்தாலே, மற்றைய கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக் கொள்ள முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாமும் டொலர்களை உழைப்பதற்கான வழிகளை தேடவேண்டும். சர்வதேச நாணய நிதியமே அனைத்தையும் எமக்கு வழங்காது. ஆனால் அவர்களிடமிருந்து உதவிகள் ஆரம்பித்தால் மற்றையவர்களிடமிருந்து பெறுவது இலகுவானதாக அமையுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உதவிகளை ஆர்மபித்தால் சீனாவிடமிருந்து உடனடியாக உதவிகளை பெற முடியும். இலங்கை கடன் வலைக்குள் சிக்கவில்லை எனவும், சீனா ஜப்பான் ஆகிய நாடுகளில் பெற்றுள்ள கடனளவு ஒரேயளவு எனவும், ஆனால் சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் ரணில் தெளிவு படுத்தியுள்ளார்.

நாம் வருமானத்தை ஈட்டுவதற்கு ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். சகல கடன்களையும் மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார திட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

இந்த வருடத்துக்கு உணவு, எரிபொருள் மற்றும் அடிப்படை தேவைகளை நிர்வதி செய்ய குறைந்தது 4 பில்லியன் டொலர்கள்   தேவைப்படுகிறது எனவும், இந்த அடிப்படை பிரச்சினைகளை தீர்த்தால் மட்டுமே  ஜனாதிபதி வீடு செல்ல வேண்டுமென போராட்டம் நடாத்துபவர்களின் கோவம் குறைவடையுமெனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் நேற்று(25.05) நிதியமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் நாடு மேலும் 4 சதவீத பொருளாதார பின்னடைவு சந்திக்குமெனவும், உரங்கள் இல்லாமையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் மக்கள் உணவு பற்றாக்குறையை அனுபவிக்க நேரிடுமெனவும் மேலும் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு உரமில்லை, பலர் ஒரு வேளை உணவினை இழந்துள்ளார்கள். நடுத்தர வர்க்க மக்கள் தாம் பலவற்றையும் இழந்துவருவதாக உணர்கிறார்கள் என  பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பெப்ரவரி வரை உணவு தட்டுப்பாடு - பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version