தமிழ்நாட்டு அரசாங்கத்தாலும் தமிழ்நாட்டு மக்களாளும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சென்றடைவதை இலங்கை அரச அதிகாரிகள் உறுதி செய்வதோடு மலையக பெருந்தோட்டங்களில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவிகளை வழங்க முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மனிதாபிமான நிவாரண பொருட்கள் தற்போது இலங்கையை வந்தடைந்து முதற்கட்டமாக மலையகம் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சிலருக்கு கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் சில பகுதிகளிலிருந்து முன்வைக்கப்பட்டு வருவதாக மயில்வாகனம் உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நிவாரண பொருட்களை வழங்கும் போது அது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்களை சென்றடைய வேண்டும் எனவும் குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் வழங்கப்படுவது முக்கியமானது எனவும்,
இந்த தருணத்தில் நாட்டில் அனைவரும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஒரு பெருந்தோட்ட பகுதியில் ஒரு சில குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கி ஒரு சில குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவது சிறந்த விடயமாக அமையாது என” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய மற்றும் தமிழக நிவாரண பொருட்கள் இலங்கையில் கட்சி தொழிற்சங்க இன மத பேதங்கள் இன்றி சரி சமமாக பகிர்ந்தளிக்கப்படும் போதும் அது நமக்கு உதவி செய்த தமிழக அரசாங்கத்திற்கும் தமிழக மக்களுக்கும் கௌரவமாக இருக்கும் என மயில்வாகனம் உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை
நிவாரண உதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் போது ஒவ்வொரு குடும்பங்களையும் கருத்தில்கொண்டு அனைவருக்கும் சென்றடைய கூடியவாறு முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.