சுற்றுலாத்துறை – ஜனாதிபதி கூட்டத்தில் ஹரின் பங்கேற்கவில்லை

இன்று (10.06) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொள்ளவில்லை.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அமைச்சு பதவியினை ஏற்றுக்கொண்டாலும் ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென்ற கொள்கையை தொடர்ந்தும் கொண்டுள்ளார். அதனாலேயே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

“04 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று நோயால் முடங்கியிருந்த சுற்றுலா கைத்தொழில், மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகையில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமை காரணமாக மீண்டும் அது வீழ்ச்சி அடைந்துள்ளது.

சுற்றுலாத் துறையானது தேசிய பொருளாதாரத்தைப் போன்று, பெருமளவிலான மக்களின் தொழில் பாதுகாப்புக்கு தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு முக்கியமான துறையாக இருப்பதால், அது துரிதமாக மேம்படுத்தப்பட வேண்டும்” என்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு பற்றிய தவறான கருத்து பிரச்சாரங்களை தூதரகங்கள் மூலம் சரி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுகின்றவர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், ஜனாதிபதி பணித்துள்ளார்.

பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

திரைப்பட படப்பிடிப்பு அமைவிடங்களை கவர்ச்சிகரமான முறையில் உலகம் பூராகவும் விளம்பரப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு அதிக கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சுற்றுலாத்துறை - ஜனாதிபதி கூட்டத்தில் ஹரின் பங்கேற்கவில்லை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version