மாட்டு வண்டி போட்டி கொடூர கொலை வரை சென்றது.

மன்னார் நொச்சிக்களம் பகுதியில் நேற்று (10.06) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தர்க்க நிலை காரணமாக இரு சாராருக்குள் நடைபெற்ற தொடர்ச்சியான சண்டைகள் முற்றி வாள்வெட்டில் நிறைவடைந்துள்ளது.

வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் நொச்சிக்குளத்தில் வசித்து வருகிறார். அவருடனும் மாட்டு வண்டி சவாரியின் போது நொச்சி குளத்தைச் சேர்ந்த சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை குறித்த நபர் நொச்சிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மாடு கட்டச் சென்றுள்ளார்.
இதன் போது மாட்டு வண்டி சவாரியின் போது தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த குறித்த நபர் பிரதான வீதிக்கு ஓடி வந்துள்ளார். அதன் போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனையடுத்து உயிரிழந்தவர்களின் மூத்த சகோதரர் ஒருவரும்,மேலும் ஒருவரும் நொச்சிக்குளத்தில் உள்ள மாட்டு வண்டி சவாரியில் வெற்றி பெற்ற ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் அவர்கள் மீது வாள் வெட்டு நடைபெற்றுள்ளது. மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டனர்.

அதன் பின்னர் உயிலங்குளத்ததை சேர்ந்த சகோதரர்களான யேசுதாசன் றோமியோ (வயது -40) மற்றும் யேசுதாசன் தேவதாஸ் (வயது-33) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நொச்சிக்குளம் கிராமத்திற்குள் சென்றுள்ளனர்.

அப்போது இருவரையும் வீதியில் இடை மறித்து கதைத்துக் கொண்டிருந்த போது பாரிய கத்திகளால் குறித்த இருவரையும் துரத்தி, துரத்தி வெட்டியதில் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் மன்னார் மாவட்டத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version