சிறுவர்களுக்கு இன்புலுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், அது சாதரணமானது எனவும் கொழும்பு, சீமாட்டி வைத்திய சாலை சிறுவர் நிபுணத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
உடல் வலி, காய்ச்சல், இருமல், தடிமன் போன்றன ஏற்படும் அதேவேளை சிலவேளைகளில் வலிப்பும் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பான நடைமுறைகளை கையாண்டது போலவே இந்த தொற்றுக்கும் பாதுகாப்பாக செயற்படுமாறும், வகுப்பறைகளில் முகக்கவசங்களை அணிவது தொற்று ஏற்படாமல் தடுக்குமெனவும் , சமூக இடைவெளிகளை பேணுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்புலுவன்சா தொற்று ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தால், பிள்ளைகளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்குமாறும், பரசிட்டமோல் வழங்கலாமெனவும் வைத்தியர் தீபால் பெரேரா கூறியுள்ளார். உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் நீராகாரங்களை அதிகமாக வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டால் அல்லது உணவு உண்ணாவிட்டால் மருத்துவரை நாடவும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.