வவுனியாவில் எரிபொருள் வண்டியை தடுத்து வீதி மறியல் போராட்டம்

ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பாவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் போராட்டம் மேற்கொண்டதையடுத்து நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 4 நாட்களாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு ஏ9 வீதியை வழிமறித்து இன்று காலை 6.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ9 ஊடான வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. சம்பவ இடத்திற்க வருகை தந்த பொலிசார் ஆர்ப்பாட்டக்காருடன் பேச்சுவர்த்தை நடத்திய போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியை விட்டு விலகிச் செல்லவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வரவைழைக்கப்பட்டதுடன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக அத்தியாவசிய தேவைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெற்றோலில் 500 லீற்றரை வரிசையில் நிற்பவர்களுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் வழங்குவதாகவும், விரைவில் பெற்றோல் வரும் எனவும் இராணுவ அதிகாரி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரால் வழக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிபொருள் பவுசரை விடுவித்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை விட்டு விலகிச் சென்றனர்.

இதனையடுத்து இராணுவப் பாதுகப்புடன் எரிபொருள் பவுசர் அங்கிருந்து சென்றதுடன், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு மத்தியில் 500 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

வவுனியாவில் எரிபொருள் வண்டியை தடுத்து வீதி மறியல் போராட்டம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version