குருந்தூர் மலை விகாரை அமைப்பு – வழக்கு 30 ஆம் திகதி

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பொலிஸ் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம் ஆகியவற்றின் பிரசன்னத்தை பின்னர் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந் நிலையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 1கடந்த 16 ஆம் திகதி குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் அணைத்து, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், போலீசார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குருந்தூர்ம மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில், பொலிசார் விளக்கமளிப்பதற்காக இன்று(23.06) வழக்கு விசாரணைக்காக திகதியிட்டிருந்தார். இன்று முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பதினோரு பேர் முன்னிலையாகியிருந்தனர்.

பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் சமுத்திர ஜீவ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பதிகாரி கலும் சி திலகரத்ன முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் சமூகமாகி விளக்கமளித்தனர்.

இந்த வழக்கில் இன்று வருகை தந்த பொலிஸார் இது தொடர்பான பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழல்நிலையில் இருப்பதாகவும் மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும் காலம் தேவை என கோரியிருந்தனர். இவர்கள் கூறிய கருத்துக்களுக்கு எங்கலால் எதிர் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த விடயங்களை அவதானித்த நீதவான், வழங்குத் தொடுனர் தரப்பான பொலிசார் இந்த வழக்குத் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு தொடர்பில் மீள நீதிமன்றிலே பதில் கூறுவதற்காக, இந்த வழக்கு விசாரணைகளை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.

குருந்தூர் மலை விகாரை அமைப்பு - வழக்கு 30 ஆம் திகதி
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version