ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி சென்றுள்ள ஜனாதிபதி இராணுவ முகாம் ஒன்றில் பாதுகாப்புக்காக ஒளிந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல்கள் செய்திகள் யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் உள் நுழைந்துள்ள நிலையில், அங்கே ஜனாதிபதி இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மக்களின் எதிர்ப்பும், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் நிராகரிப்பு காரணமாக பதவி விலகும் முடிவினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த தகவல் பகிரப்பட்டு வருகிறது.
“நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் இந்த விடயங்களை பகிர்ந்துளளதாக அறிவித்துள்ளதாகவும், அதற்கமைய, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்குகுழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளார்” என்றும் அந்த உறுதிப்படுத்தப்படாத செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.
சமகால பிரதமர் இரண்டு வார காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார், அதன் போது நிரந்தர நபர் ஒருவரை தற்காலிக ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்றம் நியமிக்க வேண்டும்”
என அந்த தகவல் பகிரப்ட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் அதி சொகுசு வாகன தொடரணி ஒன்று காட்டுநாயக்க அதி வேக நெடுஞ்சாலையினூடாக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி தற்போது செல்வதாக செய்திகள் வீடியோ காட்சிகளோடு வெளியாகியுள்ளன.