தமிழ் முற்போக்கு கூட்டணி தேசிய அரசில் இணைகிறதா?

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அறிய முடிகிறது.

தேசிய அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பிலேயே பேசப்பட்டு வருவதாக வெளியாகிய தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளது.

தமில் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியோடு கடந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்டு, ஆறு ஆசனங்களை பெற்றுக் கொண்டது. பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் கட்சியின் முடிவுக்கு மாறாக அரசாங்கத்துக்கு சார்பாக 20 ஆம் திருத்த சட்டத்தில் வாக்களித்தமையினால் கட்சியினால் நீக்கப்பட்டார்.

கடந்த மாதம், அப்போதைய பிரதமரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க சொன்னதை செய்யவில்லை. பொய் சொல்கிறார். அவரோடு பேசமாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த போதும், ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்துவதாக தெரிவித்த நிலையில் மீண்டும் அப்போதைய பிரதமரான ரணிலுக்கும் , தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் பேச்சுவார்ததைகள் இடம்பெற்றன.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியுடன் இதுவரையில் எந்த கூட்டங்களிலும் வெளிப்படையாக பங்கேற்கவில்லை.

இவ்வாறான நிலையிலேயே தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அரசாங்கத்தில் இணைவது தொடர்பிலும், அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இந்த வாரத்துக்குள் முடிவு ஒன்று எட்டப்படலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version