இலங்கையின் நட்பு நாடுகளான இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையில் எந்த தருணத்திலும் முறுகல் நிலை ஏற்பட இலங்கை காரணமாக அமையாதென பெருந்தெருக்கள், போக்குவரத்து மற்றும் ஊடக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி, சீனா கப்பலின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா மற்றும் சீனா இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
சீனாவின் செய்மதி ஆய்வு கப்பல் யுவன் வோங் 05, இம்மாதம் 11 ஆம் திகதி இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எரிபொருள் மீள் நிரப்புகைக்கும், ஏனைய தேவைகளை மீள் நிரப்புகை செய்வதற்காகவுமே வருகை தரவுள்ளதாக மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் வருகை தரும் எந்த உறுப்பினரும் உள்ளக விவகாரங்களிலோ, வியாபாரங்களிலோ ஈடுபடமாட்டார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன; சீனாவும், இந்தியாவும் இலங்கையின் நட்பு நாடுகள். அந்த நட்பை சீர்குலைக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் இலங்கை ஒரு போதும் ஈடுபடமாட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையில் தீங்கு ஏற்படுமாறு எந்த செயற்பாட்டையும் இலங்கை செய்யாது. இரு நாடுகளும் நீண்ட காலமாக இலங்கைக்கு உதவி வருகின்றன. உள்ளூரிலும் வெளிநாடுகளிழும் இரு நாடுகளும் இலங்கைக்கு கைகொடுத்து வருகின்றன. இவ்வாறான நல்ல நம்பிக்கையினையும், புரிதலையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால தொடர்ந்து வரும் நிலையில் அதனை சீர்குலைக்க இடமளிக்கப்படாதென பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
இந்த கப்பல் இலங்கை வருவதன் மூலம் இலங்கையினை சூழ்ந்த பகுதிகள் தொடர்பிலான தகவல்கள் திரட்ட வாய்ப்புகள் உளளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இந்தியாவின் ஊடகங்கள் இந்த விடயம் தொடர்பில் சர்ச்சையான செய்திகளை வெளியிட்டிருந்தன.