பங்குசந்தை இன்று 3.69 சதவீத எழுச்சியினை காட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதுமே முன்னேற்றத்தில் காணப்பட்ட பங்குசந்தை இன்று மேலும் அதிகரிப்பை காட்டியுள்ளது. 321.31 புள்ளிகள் அனைத்து பங்கு சுட்டெண் அதிகரித்து 9000 புள்ளிகளை தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் 9000 புள்ளிகளை பங்குசந்தை மீண்டும் தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதமளவில் 12 000 இற்கு மேல் காணப்பட்ட அனைத்து பங்கு சுட்டெண் நாட்டின் மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்து 7000 இனை தொட்டது. கடந்த மாதம் 11 ஆம் திகதி 4.20 சதவீத வீழ்ச்சியினை காட்டிய போதும் மீண்டும் வீழ்ச்சியடைந்து 7000 இனை அண்மித்தே காணப்பட்டது.
ஜனாதிபதி பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் சாதாரண ஏற்றத்தினை காட்டிய பங்கு சந்தை, ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையிலும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. இருப்பினும் நாட்டின் அண்மைய மாற்றங்களின் பின்னர் கடந்த வாரம் முழுவதும் எழுச்சி காணப்பட்ட நிலையில் இந்த வாரம் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறன நிலையில் வரும் வாரும் மேலும் பங்கு சந்தையில் எழுச்சி ஏற்படும் நிலை உருவாகும் என பங்கு சந்தை விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர்.