என் மக்களோடு காலி முகத்திடல் வருவேன் – மனோ எச்சரிக்கை

“கொழும்பில் பொலீசின் முழுநேர கடமை முகநூல் கணக்குகளை பின்தொடருவதா?” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாரளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போது முடிவுக்கு வந்து விட்டதாக நாம் நினைக்கும் “அரகல” என்ற போராட்டத்துடன் தொடர்பு உள்ளதா? என எனது கொழும்பு மாவட்ட மக்களின்  முகநூல் கணக்குகளுக்கு சென்று, பொலிஸ் தேடுவதாக கூறிய அவர் இதுதான் இன்று இலங்கை  பொலிஸ்கார முழுநேர கடமையா? என தனது உரையில் அதிருப்தியினை கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் வெளியிட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் தான் அறிந்த தனது நண்பர்களை குற்றப்பிரிவு பொலிஸ் அழைத்துள்ளது. இதுபற்றி பொறுப்பதிகாரியிடம் தான் வினவிய போது “இது மேலிடத்து கட்டளை ஐயா” என பொறுப்பதிகாரி பொறுப்பாக கூறுகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் வன்முறையை வெறுக்கிறேன். வீடுகள் தீவைப்பு போன்றவற்றை நான் ஏற்கனவே இந்த சபையில் கண்டித்து விட்டேன். ஆனால் இது வன்முறை அல்ல. சாதாரண மக்கள் ஆர்வம் காரணமாக,  சுற்றிப்பார்க்க ஜனாதிபதி மாளிகைக்கு போனார்கள். படம் எடுத்தார்கள். வீடியோ எடுத்தார்கள். இவை குற்றங்களா?

இவர்களின் தொலைபேசி எண்களை தேடி பிடித்து, தகவல் அனுப்பி பொலிசுக்கு வருமாறு கூப்பிடுகிறீர்கள்.
இவர்கள் சாதாரண அப்பாவி மக்கள். ஜனாதிபதி மாளிகை  “ஜிம்மில்” ஒரு போலிஸ்காரர் உடற்பயிற்சி செய்தார். இன்னொருவர் அங்கே “பியானோ” வாசித்தார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வந்தன.

இதை பார்த்த சாதாரண மக்கள், வரிசையாக அங்கெல்லாம் போனார்கள். படமெடுத்தார்கள்.
இவர்களை இன்று நீங்கள் தேடுகிறீர்கள். இது உடன் நிறுத்தப்பட வேண்டும். மே 9ம் திகதிவரை காலிமுக போராட்டம் அமைதியாக நடந்தது. கொழும்பில் உள்ள பல வெளிநாட்டு ராஜதந்திரிகள், காலிமுக போராட்டம் முழு உலகுக்கும் முன் மாதிரியான அமைதி போராட்டம் என எனக்கு கூறியுள்ளார்கள்.

வளர்ச்சியடைந்த நாடுகளில், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கூட  இப்படியான போராட்டங்கள் வன்முறையில் முடிகின்றன. ஆனால் இங்கே மே-9 வரை வன்முறை நடக்கவில்லை. அன்று என்ன நடந்தது என்பதை ஆராயுங்கள்”  என தனது உரையில் மேலும் மனோ கணேசன் MP கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒருபுறம், எதிர்கட்சிகளை “தேசிய ஐக்கிய” அரசுக்கு வரும்படி அழைக்கிறார். ஆனால், மறுபக்கத்தில் இப்படி அப்பாவி மக்களை அவரது அரசு கைது செய்கிறது. இந் நடவடிக்கைகள் தமது  அழைப்புக்கு முரணாக அமைகிறது என்பதை ஜனாதிபதி உணரவேண்டும் என கூறியுள்ள அவர் “இப்போது போராட்டக்காரர்கள் காலிமுக திடலில் இருந்து போய் விட்டார்கள். எனது மாவட்ட மக்களை இப்படி கைது செய்தால், நான் என் மக்களை அழைத்துக்கொண்டு காலி முகத்திடலுக்கு வருவேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என் மக்களோடு காலி முகத்திடல் வருவேன் - மனோ எச்சரிக்கை
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version