சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கைக்கு வருவதனை இந்திய அழுத்தம் காரணமாக இலங்கை மறுத்ததாக சீனா கூறியதனை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் வாராந்த ஊடக சந்திப்பில், அந்த அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை சுதந்திர இறையாண்மையுள்ள நாடு. அவர்கள் சுதந்திரமாக எந்த முடிவினையும் எடுக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளின் முதற் கொள்கையில் இலங்கை முக்கியமானது என தெரிவித்த வெளியுறவு பேச்சாளர், இந்த வருடம் இலங்கையின் மோசமான பொருளாதார நிலையினை சீர் செய்ய இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை முன்னெப்போதும் இல்லாத அளவு வழங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது என கூறினார்.
“நாம் இலங்கையுடன் பரஸ்பர மரியாதையினை கொண்டுள்ள அதேவேளை, பரஸ்பர உணர்வு, ஆர்வம் என்பனவற்றையும் கொண்டுள்ளதாக கூறிய பேச்சாளர், அபிவிருத்தி இணைப்புகளையும் கொண்டுள்ளதாக கூறினார்.
இந்தியா, இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீளெழுச்சி என்பனவற்றில் தாம் உறுதியாக கைகொடுத்து வருவதாகவும், அது தொடருமெனவும் கூறியுள்ளார்.
இம் மாதம் 11 ஆமா திகதி முதல் 18 ஆம் திகதி வரை சீனாவின் செய்மதி ஆய்வு கப்பல் யுவன் வோங் 05 இலங்கைக்கு வருவதாகவும் எரிபொருள் மற்றும் இதர மீள் நிரப்புகைக்காகவும் வருகை தருவதாக சீனா தெரிவித்திருந்தது. இருப்பினும் சீனா கப்பலின் வருகை தொடர்பில் தமது அதிருப்தியினை வெளியிட்ட இந்தியா இந்த விடயம் தொடர்பில் தாம் அவதானித்து வருவதாகவும் கூறியது.
அதனை தொடர்ந்து இலங்கை சீனாவிடம் குறித்த கப்பலது பயணத்தை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்தது. அவ்வாறன நிலையில் சீனா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை இவ்வாறான முடிவினை எடுத்ததாக அறிவித்திருந்தது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தாம் இலங்கைக்கு எந்த அழுத்தங்களையும் வழங்கவில்லை என இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சீனாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.