2900 கோடி அமெரிக்க டொலர்களுக்கான ஒப்பந்தத்தில் சர்வதேச நாணய நிதியம், மற்றும் இலங்கை அதிகாரிகள், அலுவலக மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் மூலம் பாரிய பொருளாதார மேம்படுத்தல், கடன் ஸ்திரத்தன்மை போன்றவற்ற்றை சீராக்குதல். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்தல், ஊழலற்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், நிர்வாக மாற்றங்களை செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான கடன் உதவிகளை வழங்கியுள்ள நாடுகள் கடன் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், மேலதிக கடன்களை வழங்குவதன் மூலம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுமாறும் சர்வதேச நாணய நிதியம் வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு கடன் வழங்கும் நாடுகள், தனிப்பட்ட கடன் வழங்குனர்கள் நம்பிக்கையான சிறந்த ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச நாணய நிதியம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்னர் இலங்கைக்கு உதவிகளை வழங்கி, இலங்கையின் பொருளாதார மீழ்ச்சிக்கு உதவ வேண்டுமென மேலும் IMF தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இன்றுடன் அவர்களது வேலைத்திட்டங்கள் நிறைவடைகின்றன. இதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்துள்ளது.