ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவி விலகுவதற்கான காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தேர்தலை ஒத்திவைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து ஆட்சியில் இருக்க முயற்சித்தால் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பிக்கத் தாம் தயார் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உடனடியாக பதவி விலகுவதே அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டா வெளியேற்றபட்ட பின்னர், அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட வாயிற்காப்பாளர் ஒருபோதும் இந்த தகுதிக்கு பொருத்தமற்றவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.