கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உரிய தீர்வை பெற்றுதருவதாக ஆளுநர் உறுதி!

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இடத்திற்கான வாடகை அதிகளவாக அறவிடப்படுகின்றமை தொடர்பில், உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதருவதாக வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் உறுதியளித்துள்ளார்.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இடவாடகை கட்டணம் அதிகளவாக அறவிடப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதற்கமைய, வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸை நேற்றைய தினம் (26.06) நேரடியாக சந்தித்த சிவஞானம் சிறிதரன், இந்த விடயம் தொடர்பில் எடுத்துக்கூறினார்.

இதன்போது கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து புதிய மதிப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலான கட்டண அறவீட்டினால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைச் குறித்து உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் உறுதியளித்திருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version