பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் கடந்த ஜூன் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் இன்றி பொலிஸ் திணைக்களம் இயங்குவதாக குற்றச் சாட்டுகள் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.
ஜனாதிபதி 48 மணி நேரத்துக்குள் புதிய பொலிஸ் மா அதிபரை நியமனம் செய்வார் என பிரதமர் டினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையிலேயே இன்று(08.07) பொலிஸ் தலைமயகத்தை மேற்கோள் காட்டி ஊடகமொன்று இந்த பதவி நீடிப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த பதவிக்கு நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, வட மேல் மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் L.S பத்திநாயக்கே, மேல் மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் தகுதியடையவர்களாக காணப்படுகின்றனர்.