சமஸ்டியே தீர்வு!

13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

13ஆவது திருத்தம் குறித்த கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குறித்த கடிதத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின்  பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டடுள்ளனர்.

அந்த கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ்த் தரப்புக்களால் 13ஆம் திருத்தம் நிராகரிக்கப்பட்டது என்பதனைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சமஸ்டி மூலமே 75 வருடங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

13ஆம் திருத்தம் 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது அதனைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டு அதனைச் சட்டமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென்றும் அதனைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம் சிரேஸ்ட உபதலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் ஒப்பமிட்டு அப்போதய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு அனுப்பிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தயாரித்த தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித்தீர்வு யோசனை குறித்த வரைபும், கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

சமஸ்டியே தீர்வு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version