இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா உறுதி!

இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்று வரும் 07வது சீன – தெற்காசிய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போது அந்நாட்டின் வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் வான் யீ இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய பெருமையை பாதுகாப்பதற்கு சீனா பலமாக ஆதரவளிப்பதாகவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் சுயாதீன அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்தவும், வறுமைப் பொறியிலிருந்து விடுபடவும், தொழில்மயமாக்கல் செயல்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை விரைவுபடுத்தவும் சீனா உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இக்கட்டான காலங்களில் சீனாவின் நிரந்தர ஆதரவு மற்றும் பயனுள்ள ஆதரவுக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version