வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இன்று (26.08) வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீரிழப்பைத் தடுக்க, தண்ணீர் உள்ளிட்ட இயற்கையான திரவங்களைக் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நேற்றைய தினம் (25) அதிகபட்ச வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வவுனியாவில் பதிவாகியுள்ளதுடன், அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறித்த பகுதிகளில் 30.4 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 29 பாகை செல்சியஸை தாண்டியுள்ளது.
சுற்றுச்சூழலின் வெப்பநிலை ஒரே மாதிரியாக இருந்தாலும், உடலால் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தினால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.